ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா பெரும் தொகையைச் செலவிட்டும் இக்கட்டான நேரத்தில் அவை கைவிடுவதாகவும் அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் முன்வராதது டிரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழித்தடத்தை மீட்பது எளிய காரியம் என அவர் கருதினாலும், நட்பு நாடுகள் இதில் ஈடுபட தயக்கம் காட்டுவது நேட்டோவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
மறுபுறம் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் கடல்வழிப் பாதையை பாதுகாக்கத் தயார் என்றாலும் முதலில் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான இந்தப் போர் ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ள சூழலில், உடனடியாக பதற்றத்தைத் தணிப்பதே முக்கியம் என பிரெஞ்சு அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தங்களுக்குத் தேவையில்லை என்றும், தாங்களே பெரும் வெற்றிகளைப் பெற்று வருவதாகவும் டிரம்ப் ஒருபுறம் கிண்டல் செய்தாலும், போர் நின்றால் மட்டுமே உதவ முடியும் என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக உள்ளன.
இதனால் அமெரிக்காவிற்கும் அதன் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
