தென்மேற்கு ஸ்பெயினின் வழியே பாய்ந்தோடும் ‘ரியோ பின்டோ’ நதியைக் கவணித்தால், அது இயற்கையாக உருவான நதியைப் போலத் தெரியாது; மாறாக, ஒரு மாபெரும் ஓவியர் தன் தூரிகையால் தீட்டிய அடர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஓவியம் போலவே காட்சியளிக்கும். சுமார் 50 கிலோமீட்டர்கள் தூரம் ஓடும் இந்த நதியின் இந்த விசித்திர நிறத்திற்குப் பின்னால் எந்தவொரு செயற்கையான இரசாயனக் கழிவுகளோ அல்லது மாசுபடுதலோ இல்லை. மாறாக, கோடிக்கணக்கான ஆண்டுகால பூமிக்கடியிலான புவியியல் வரலாறும், பல ஆயிரமாண்டுகளாக நடந்துவரும் மனிதர்களின் கனிமச் சுரங்கத் தொழிலும் தான் முழுமையான காரணங்கள்!
இந்த நதி பாயும் பகுதி முற்காலத்தில் மாபெரும் எரிமலைச் செயல்பாடுகள் நடந்த இடமாகும். இதன் காரணமாக நிலத்தடியில் சல்பைடு நிறைந்த கனிமங்களின் மலைப்பாங்கான சேமிப்புகள் புதைந்துள்ளன. மழைநீரோ அல்லது நிலத்தடி நீரோ இந்தக் கனிமங்களை அடைந்து, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் இணையும்போது அங்கு தொடர்ச்சியான இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.
இதன் விளைவாக இரும்பும் சல்பரும் கலந்த கூட்டுப்பொருட்கள் தண்ணீரில் கரைந்து, நதியின் நீரை ஒரு துளி மிச்சமின்றி மிகக் கடுமையான அமிலத் தன்மையைக் கொண்டதாக மாற்றுகின்றன. நதியின் சில பகுதிகளில் நீரின் பி.எச் (pH) மதிப்பு சுமார் 2 வரை குறைந்துவிடுகிறது. இது ஏறக்குறைய சமையல் வினிகரின் அமிலத்தன்மைக்குச் சமமானது. இத்தகைய கொடூரமான, நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் கடுமையான அமிலத் தன்மையுள்ள நீரில் சாதாரண மீன்களோ அல்லது நீர்வாழ் தாவரங்களோ ஒரு நிமிடம் கூட உயிர்வாழ முடியாது.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இந்த நதி உயிரற்ற பகுதி அல்ல! இங்கு ‘எக்ஸ்ட்ரீமோஃபைல்ஸ்’ எனப்படும் நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. மற்ற உயிரினங்களுக்கு மரணத்தைத் தரும் இந்தச் சூழல், இந்த நுண்ணுயிரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நுண்ணுயிரிகள் சூரிய வெளிச்சத்தையோ அல்லது சாதாரண கரிமப் பொருட்களையோ நம்பியிராமல், தண்ணீரில் உள்ள இரும்பு மற்றும் சல்பரையே தங்களின் ஆற்றலுக்கான உணவாக மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
இந்த நதியின் நிறத்திற்கு இயற்கையான புவியியல் காரணங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மனிதர்களின் தலையீடும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய செப்புக் காலம், வெண்கலக் காலம் மற்றும் ரோமானியர்களின் ஆட்சிக் காலம் தொட்டே கனிமச் சுரங்கத் தொழில் நடைபெற்றதற்கான தடயங்கள் உள்ளன.
பூமிக்கடியில் இருந்து சல்பைடு பாறைகளை வெட்டி வெளியே எடுத்ததால், காற்று மற்றும் தண்ணீர் இந்தக் கனிமங்களுடன் விரைவாகத் தொடர்பு கொண்டு இயற்கையான இரசாயன மாற்றங்களின் வேகத்தை மேலும் துரிதப்படுத்தியது. இங்கிருந்த நவீன சுரங்கப் பணிகள் 2001-ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் 2016-ல் மீண்டும் செம்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த நதியின் சிவப்பு நிறம் முழுக்க முழுக்க சுரங்கக் கழிவுகளின் மாசுபாடு என்றே நம்பப்பட்டது. ஆனால், அறிவியல் ஆய்வுகள் இது இயற்கையான புவியியல் இரசாயனம் என்பதையும், சுரங்கப் பணிகள் அந்தச் செயல்பாட்டைச் சற்று விரைவுபடுத்தியுள்ளன என்பதையும் வெளிப்படுத்தின.
இப்போது இந்த நதி வெறும் சுற்றுலாத் தலமட்டுமல்ல; மாறாக, விண்வெளியில் வேற்றுக்கிரக வாழ்வைத் தேடும் விஞ்ஞானிகளுக்கோர் ஒப்பற்ற இயற்கைக் கூடமாக மாறிவிட்டது. இங்கு கண்டெடுக்கப்படும் ‘ஜாரோசைட்’ என்ற கனிமம், செவ்வாய்க் கிரகத்தின் மண்ணிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கக்கூடிய நுண்ணுயிரிகளின் தடயங்களை அறிந்துகொள்ள ஸ்பெயினின் இந்த நதி விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சாட்சியாகத் திகழ்கிறது.
