மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 14 வயது சிறுமியை ஆபாச வீடியோ வைத்து மிரட்டி, ஆறு ஆண்கள் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அம்பலமாகியுள்ளது.

காவல்துறை தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் வசித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவி ஆவார். கடந்த ஜூன் மாதம், 25 வயது இளைஞர் ஒருவர் அச்சிறுமி உடை மாற்றும்போது ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அச்சிறுமியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. முக்கியக் குற்றவாளி அந்த வீடியோவை தனது நண்பர்களான இருவரிடம் பகிர்ந்துள்ளார். அவர்களும் அந்த வீடியோவை வைத்து சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். தொடர்ந்து மேலும் மூன்று பேருக்கு இந்த வீடியோ கிடைக்க, அவர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்தச் சித்திரவதையை வேறு வழியின்றிச் சகித்து வந்த சிறுமியின் நிலை குறித்து இறுதியாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

செய்தி வெளியானதும் தீவிர நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தலைமறைவாக உள்ள மீதமுள்ள நான்கு பேரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.