ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 140 டாலராக உயர்ந்துள்ள நிலையில், கடலில் தேங்கியுள்ள ஈரானின் 14 கோடி பீப்பாய் எண்ணெயை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு சுமார் 15 பில்லியன் டாலர் (1.4 டிரில்லியன் ரூபாய்) வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த எண்ணெயை விநியோகிப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையைக் குறைக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. இதுவரை சீனாவிற்கு மட்டுமே குறைந்த விலையில் எண்ணெய் விற்று வந்த ஈரானுக்கு, தற்போது அமெரிக்காவின் இந்த முடிவு பொருளாதார ரீதியாகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மறுபுறம், போரை நீட்டிக்கும் உத்தியின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தடுத்துள்ளதால், சுமார் 1,000 கப்பல்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றன. இருப்பினும், லராக் தீவு அருகே பாதுகாப்பான பாதை ஒன்றை அமைத்துள்ள ஈரான், அதன் வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் தலா 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை நிறுத்தாவிட்டால் எண்ணெய் விலை 180 டாலரைத் தொடும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தையே ஈரான் தன் பக்கம் திருப்பியுள்ளது.