தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு வயதுச் சிறுமி, பின்னால் வந்த எஸ்யூவி கார் மோதிய வேகத்தில் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டாள். ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தச் சிறுமியைப் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவளைக் காப்பாற்ற முடியாமல் போனது உறவினர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

இந்த விபத்து, கார் பயணங்களின்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பதில் ஒளிந்துள்ள பெரும் ஆபத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது. விபத்து நேரிடும்போது ஏற்படும் பயங்கர அதிர்வினால், திறந்திருக்கும் ஜன்னல் வழியாகப் பயணிகள், குறிப்பாகக் குழந்தைகள் வெளியே தூக்கி வீசப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை இந்தத் துயரச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கார் ஏசி வேலை செய்யாவிட்டாலும், பாதுகாப்பு கருதி ஜன்னல்களை மூடி வைப்பதும், குழந்தைகளைச் சீட் பெல்ட் அல்லது பிரத்யேக இருக்கைகளில் அமர வைப்பதும் எவ்வளவு அவசியம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாகும்.