மகாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் அருகே போஸ் கிராமத்தைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் சோனாலி நேதாஜி ஜாதவ் (34), தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த சோனாலி, தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த துகாராம் கவந்தரே என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், சோனாலி மற்றவர்களுடன் பழகுவதாக துகாராமுக்கு ஏற்பட்ட அதீத சந்தேகமே இந்தத் துயரமான முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, சோனாலிக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்குச் சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக ஆசை வார்த்தை கூறி துகாராம் வெளியே வரவழைத்துள்ளார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, சோனாலியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கச் சடலத்தைக் கால்வாயில் வீசிவிட்டு எதுவுமே தெரியாதது போலத் தப்பியோடியுள்ளார். பல நாட்களாகச் சோனாலி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் சிக்னலை வைத்துப் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் துகாராம் சிக்கினார். தற்போது அழுகிய நிலையில் சோனாலியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், கைதான காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.