மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள லோஹாரா தாலுகாவில் இருக்கும் ஜேவலி என்ற பகுதியில் பார்ப்போரைக் கலங்க வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த மொபைல் போன் வெடிப்புச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தானது குரு பூர்ணிமா திருவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள புகழ்பெற்ற ‘குரு சித்தேஸ்வர் விரக்த் மடத்தில்’ இந்த முக்கியமான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்த நபர், தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் மொபைல் போனை வைத்திருந்தார். அப்போது திடீரென அவரது பாக்கெட்டிலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியுள்ளது.
நொடிப்பொழுதில் வெடித்த மொபைல் போன் பாக்கெட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு சோமநாத் மற்றும் அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், அடுத்த சில நொடிகளிலேயே அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்து அங்கிருந்த அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மொபைல் போன்கள் தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட நிலையில், ஆடை பாக்கெட்டில் இருக்கும்போதே இப்படி திடீரென வெடிப்பது பொதுமக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
