பரபரப்பான இன்றைய அவசர உலகில், பிறருக்குச் செய்யும் சிறிய மனிதாபிமான உதவிகள் கூட மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் வெள்ளம் சூழ்ந்த சாலையில், காலில் ஏதோவொரு பொருள் சிக்கித் தவித்த பெண் ஒருவருக்கு, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் உடனடியாக இறங்கி உதவி செய்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் ஆபத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்லும் இக்காலத்தில், அந்த இளைஞரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது வெள்ளம் சூழ்ந்த சாலையில் சௌரவ் பார்கவா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு ஒரு பெண் தனது ஸ்கூட்டருடன் வெள்ள நீரில் நகர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்துள்ளார். உடனே தனது பைக்கை நிறுத்தி, “மேடம், உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், “ஆமாம் தம்பி, என் கால் ஏதோவொன்றில் மாட்டிக் கொண்டது, நகர முடியவில்லை” என்று பதற்றத்துடன் உதவியை நாடியுள்ளார்.

அதற்கு அந்த இளைஞர், “கவலைப்படாதீர்கள், நான் சரி செய்கிறேன்” என்று மிகவும் நிதானமாகவும் மரியாதையாகவும் கூறிவிட்டு, உடனடியாக வெள்ள நீரில் இறங்கி அந்தப் பெண்ணின் காலில் சிக்கியிருந்த பொருளை அகற்றி அவரை விடுவித்துள்ளார். பின்னர், “நீங்கள் கீழே இறங்குங்கள், நான் வண்டியை ஓட்டிச் சென்று தண்ணீர் குறைவாக உள்ள பாதுகாப்பான இடத்தில் நிறுத்துகிறேன்” என்று கூறி, அவரது ஸ்கூட்டரையும் மீட்டுத் தந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்றும் அன்போடு விசாரித்துள்ளார். உதவி பெற்ற அந்தப் பெண் அந்த இளைஞருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தனது கேமராவில் பதிவு செய்திருந்த அந்த இளைஞர், “சமூக வலைத்தளத்திற்காக ஏதேனும் வீடியோ ‘கண்டென்ட்’ எடுக்கவே வெளியே சென்றேன், ஆனால் ஒருவருக்கு உதவியதன் மூலம் பலரது புண்ணியத்தையும் வாழ்த்துகளையும் பெற்றுத் திரும்பியுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை விடியோவைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள், “இன்றைய சமூகத்திற்குத் தேவையான உண்மையான மனிதர் நீங்கள்தான்”, “அவரது அமைதியான மற்றும் கனிவான குரல் நெஞ்சைத் தொடுகிறது” என்று அந்த இளைஞரின் நற்செயலைப் பாராட்டித் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.