தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வைத்த குற்றச்சாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. “பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்” என்று விஜய் பேசியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்றும், இது ஜனநாயகத்தைச் சிதைக்கும் என்றும் வீரபாண்டியன் சாடியுள்ளார்.
வாக்காளர்களை வெளிப்படையாகப் பணம் வாங்கத் தூண்டிய விஜய் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன், இந்தத் தேர்தலைத் தமிழகத்திற்கும் ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கும் இடையிலான ‘அதிகாரப் போர்’ என்று வர்ணித்தார்.
பாஜக மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்துவதே தங்கள் இலக்கு என்றும், திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். விஜய்யின் பேச்சைத் தேர்தல் ஆணையம் எப்படிக் கையாளப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.
