மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில், 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிகள் இருவரை மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளி மாணவர்கள் இருவர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிகக் கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
தார் மாவட்டத்தின் குக்சி (Kukshi) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் தங்களது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கிராமத்தின் அருகே வேப்பம்பழங்களைச் சேகரிப்பதற்காகச் சென்றபோது, அங்கு பைக்கில் வந்த இரண்டு சிறுவர்கள் அவர்களை மிரட்டிப் பலவந்தமாகப் பைக்கில் ஏற்றி மக்கள் நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய இடத்திற்குக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபரீதச் செயலுக்குப் பிறகு, “நடந்ததை யாரிடமாவது சொன்னால் உங்களைக் கொலை செய்துவிடுவோம்” என்று அச்சிறுமிகளை மிரட்டிவிட்டு அந்தப் பாழடைந்த இடத்திலேயே அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டுக் குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெண் குழந்தைகள், மிகுந்த மன உளைச்சலுடன் நள்ளிரவில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அழுதுகொண்டே நடந்து தங்களது வீடுகளை வந்தடைந்துள்ளனர்.
சிறுமிகளின் பரிதாப நிலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் விபரம் கேட்டு, உடனடியாகக் குக்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் அவர்களைக் கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் குக்சி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் யாதவ் தெரிவித்துள்ள இந்த சோகமான செய்தி தற்பொழுது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
