முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் மைதான ஒழுங்கீனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, எதிரணி வீரருடன் வைபவ் சூர்யவன்ஷி உடலளவில் மோதலில் ஈடுபட்டார்.

இந்த ஒழுங்கீனச் செயலைக் கண்டித்த மஞ்ச்ரேக்கர், “எதிரணி வீரர்கள் எவ்வளவுதான் சீண்டினாலும், மைதானத்தில் இப்படி உடலளவில் மோதிக்கொள்வது முற்றிலும் தவறானது” என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் நோக்கில் வைபவ் சூர்யவன்ஷியை அடுத்த போட்டியில் விளையாட வைக்காமல் அணியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “நான் மட்டும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் சூர்யவன்ஷியை அணியில் சேர்த்திருக்க மாட்டேன்” என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திறமையான இளம் வீரராக அறியப்படும் சூர்யவன்ஷிக்கு, சர்வதேச அளவில் சிறந்து விளங்க திறமையோடு சேர்த்து பொறுமையும், சுயக்கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.