ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் 171 ரன்களைக் குவித்தது.
இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால், ஐசிசி அந்த அணி மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததற்காக, பாகிஸ்தான் அணியின் போட்டி ஊதியத்தில் இருந்து 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தவறை பாகிஸ்தான் கேப்டன் சனா மாலிக் ஒப்புக்கொண்டார்.
முதல் போட்டியில் மோசமான ரன் ரேட்டுடன் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான், தனது அடுத்த போட்டியில் வரும் புதன்கிழமை ஜூன் 17 தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.
