இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையே தம்புள்ளை மைதானத்தில் ஜூன் 15 அன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்று பரபரப்பாக முடிவடைந்தது. போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்ஷிக்கும், இலங்கை அணியின் விஷேன் ஹலம்பகே என்ற வீரருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் இருவருக்குள்ளும் ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளும் அளவிற்கு முற்றியது.

மைதானத்தில் நடந்த இந்த ஒழுங்கீனச் சம்பவம் குறித்து போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், மோதலில் ஈடுபட்ட விஷேன் ஹலம்பகே உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களின் போட்டி ஊதியத்திலிருந்து  அபராதம் விதித்துக் கழிக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தில் இந்திய வீரர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த விவகாரத்தில் மற்றொரு சுவாரசியமான திருப்பமாக, இலங்கை ‘ஏ’ அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மைதானத்தில் வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஹலம்பகே இடையே சண்டை நடந்தபோது, டிக்வெல்லா குறுக்கே புகுந்து இருவரையும் விலக்கி சமாதானம் செய்யவே முயன்றார்.

இருப்பினும், அவர் மீது சண்டையிட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை; மாறாக, போட்டியின் போது நடுவர்களிடம் விதிகளுக்குப் புறம்பாக ‘அத்துமீறி அப்பீல்’  செய்த காரணத்திற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஓவர் வரை சென்ற விறுவிறுப்பான போட்டியின் முடிவில், வீரர்கள் தங்களது நிதானத்தை இழந்து மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.