ஐபிஎல் தொடரில் தனது அதிரடி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் இந்திய வீரர் வைபவ் சூரியவன்ஷி, தற்போது தனது மைதான ஒழுங்கீன நடவடிக்கையால் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளார். இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியின் போது, இலங்கை பந்துவீச்சாளர் விஷேன் ஹலம்பகேவுடன் வைபவ் சூரியவன்ஷி கைகலப்பில் ஈடுபட முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, வைபவ் சூரியவன்ஷிக்கு இந்திய அணி நிர்வாகம் உடனடியாக ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “இளம் வயதிலேயே இவருக்கு இந்தத் தடையை விதித்தால் மட்டுமே ஒரு நல்ல பாடம் கிடைக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டார்” என்று காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூரியவன்ஷி மைதானத்தில் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல என்று குற்றம் சாட்டியுள்ள பாசித் அலி, கடந்த அண்டர்-19 உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அலி ரசாவுடன் வைபவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்துள்ளார். அந்தப் போட்டியில் அவுட் ஆன பிறகு, பாகிஸ்தான் பந்துவீச்சாளரை நோக்கி வைபவ் தனது காலணியைக் காட்டி சைகை செய்ததாக அவர் சாடியுள்ளார்.
இத்தகைய செயல்கள் வைபவ் சூரியவன்ஷிக்கு மட்டுமன்றி, இந்திய கிரிக்கெட்டிற்கே அவப்பெயரைத் தேடித்தரும் என்றும், கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்பதை இந்தச் சிறுவனுக்கு இப்போதே புரிய வைக்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் பெரும் பிரச்னை வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். பாசித் அலியைத் தொடர்ந்து, மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான காம்ரான் அக்மலும், வைபவ் தனது நடத்தையை மாற்றி ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
