தம்புள்ளை மைதானத்தில் இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர் வைபவ் சூரியவன்ஷி மற்றும் இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகே இடையே ஏற்பட்ட மைதான மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்து வைபவ் சூரியவன்ஷியும், சூரியான்ஷ் ஷெட்கேவும் மைதானத்தை விட்டு வெளியேறிய போது, இலங்கை வீரர்கள் வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இந்தியா ‘ஏ’ அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே தற்போது மனம் திறந்துள்ளார். “மைதானத்தில் நடந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், எனக்கு வைபவ் சூரியவன்ஷியை நன்றாகத் தெரியும்; அவன் மிகவும் அமைதியான குணம் கொண்ட சிறுவன். இந்த விவகாரம் குறித்து இந்திய அணிக்குள்ளும் ஆலோசிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம் என்று வலியுறுத்திய சாய்ராஜ் பகுதுலே, இலங்கை வீரர்களின் நடையையும் மறைமுகமாகச் சாடியுள்ளார். இலங்கை அணியிலும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது வீரர்களுக்கு மைதானத்தில் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இது எங்கள் அணி வீரர்களுக்கும் பொருந்தும். வைபவ் சூரியவன்ஷி இன்னும் மிக இளம் வயது வீரர், அவனுக்கு முன்னால் பெரிய எதிர்காலமும் பொறுப்புகளும் உள்ளன. அவனிடம் பேசி சில விஷயங்களை எடுத்துரைப்போம். எதிர்காலத்தில் அவனிடமிருந்து இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
