அதிமுக-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக மூலம் அடையாளம், அதிகாரம், முகவரி மற்றும் வாழ்வு பெற்று உயர்ந்தவர்கள், கட்சி சோதனையான காலகட்டத்தில் இருக்கும் போது தலைமை சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை என்று அவதூறு பரப்புவதை தொண்டர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா நாடகம், வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்ற வேதனையை தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சிக்கு வரும் முன்பு அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் இருந்த சொத்துக்களையும், தற்போது அதிமுக மூலம் சேர்த்த முதலீடுகளையும் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார், “சுயநலத்திற்காகவும், முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவும் கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டு ஓடுவதை வேடிக்கை பார்க்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நின்றுகொண்டு, தற்போது கட்சிக்கு ஒரு தோல்வி வந்தவுடன் தலைமை சரியில்லை என்று நாடகமாடுகிறார்.

சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் மதிப்பு, வேறு கட்சியில் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள். த.வெ.க நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பே சேர்ந்திருக்க வேண்டியதுதானே, ஏன் தேர்தல் முடிந்த பிறகு சேருகிறீர்கள்?” என்று சாடியுள்ளார். சாமானியரான எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், தங்களின் சுயநலத்திற்காக கட்சி தாவும் நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.