தமிழக அரசியல் களத்தில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை விலகப் போகிறாரா என்ற பலத்த கேள்விக்குறி எழுந்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஓப்பனாகப் பேசிய அவர், இனி இந்தத் தலைவர் பதவியில் தான் தொடர வேண்டாம் எனத் தனது உள்மனது கூறுவதாகவும், பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தான் விடுத்த கோரிக்கையைக் காங்கிரஸ் தலைமை பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் இருக்கும் சில கசப்பான உணர்வுகள் மற்றும் சொந்தக் கட்சி நண்பர்களே தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசி வருவது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி எம்பி குறித்துப் பொருத்தமான நேரத்தில் மனம் திறந்து பேசப் போவதாகவும் அதிரடியாகக் கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகையின் இந்த திடீர் ராஜினாமா முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுன கார்கே, “கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நான் உங்களை மீண்டும் கூப்பிட்டுப் பேசுகிறேன்” என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், முக்கியக் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவரே அதிருப்தியில் ராஜினாமா செய்யத் துணிந்துள்ள இந்த விவகாரம் தற்போது சோசியல் மீடியாவிலும், அரசியல் மேடைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.