தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது, தங்களின் இயலாமையை மூடிமறைக்கவும், தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவும் த.வெ.க. அரசு மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் வெள்ளை அறிக்கை மற்றும் நிதி மேலாண்மை குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது, நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. இதற்கு முன்பு 2001 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2001-இல் வெளியான அறிக்கை முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலவரத்தையும், 2021-இல் வெளியான அறிக்கை முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலவரத்தையும் கொண்டிருந்தன.
ஆனால், தற்போது வெறும் முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலை மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன?” தொடர்ந்து பேசிய அவர், த.வெ.க. அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒரு திறந்த சவாலையும் விடுத்தார். த.வெ.க. ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், அதன் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, த.வெ.க. அரசு குறைவான கடனை வாங்கிக் காட்டினால், நான் எனது பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன். கவர்னர் உரைக்கு முன்பாகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணியில் அரசியல் தந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நாளை எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லவே இந்த அறிக்கை அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசின் இந்த வெள்ளை அறிக்கை ஒரு ‘எஸ்கேப்பிசம்’ (கடமையிலிருந்து தப்பித்தல்). வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்கவே அரசு பார்க்கிறது” என்றார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், தற்போதைய திட்ட முடக்கங்களையும் ஒப்பிட்டு அவர் பேசியதாவது, பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் பல்வேறு மூலதனத் திட்டங்களை எல்லாம் தற்போதைய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அவ்வாறு திட்டங்களை நிறுத்திவிட்டு, ‘திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை’ என த.வெ.க. அரசு பழிசுமத்துகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘காலை உணவுத் திட்டம்’ போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் குஜராத் போன்ற மாநிலங்களில் கூடக் கிடையாது.
“த.வெ.க. அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் லட்சணத்தை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே மக்கள் பார்த்துவிட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டிலேயே மாநில அரசின் நிதி நிலைமையை நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அதற்குப் பிறகுதான் த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையையே வெளியிட்டது. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.”
“நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி நிதி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை நாங்களும் பார்ப்போம். அரசு கடன் வாங்குவது தவறல்ல; ஆனால், அந்தக் கடனை மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்”
என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
