“இப்போ ரிலீஸ் பண்ணியிருக்கிற வெள்ளை அறிக்கையில வெறும் 5 வருஷக் கணக்கை மட்டும் காட்டி யாரை காப்பாத்தப் பார்க்குறீங்க?” என்று தற்போதைய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் .
கடந்த 2001 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் முறையே 10, 15 ஆண்டுகாலத் தரவுகளுடன் வெள்ளை அறிக்கை வெளியான நிலையில், தற்போதைய அரசு கடந்த 5 ஆண்டுகால நிதிநிலையை மட்டும் குறிப்பிட்டிருப்பது யாருடைய நிர்வாகச் செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களின் நிர்வாக இயலாமையை மறைக்கவே இந்த அறிக்கை நாடகம் அரங்கேறியுள்ளதாகச் சாடிய அவர், இவர்களின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ. 20 லட்சம் கோடியைத் தொடும் என்றும், திமுக அரசை விடக் குறைவாக இவர்கள் ஆண்டு சராசரிக் கடன் வாங்கிக் காட்டினால் தங்களின் பொதுவாழ்வுப் பொறுப்புகளிலிருந்து விலகத் தயார் என்றும் அதிரடி சவால் விடுத்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடக்கிவிட்டு, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட முந்தைய மக்கள் நலத்திட்டங்களை விமர்சிப்பது ஏமாற்று வேலை என்றும், புதிய திட்டங்களை அறிவிக்காமல் கைவிரிப்பதற்காகவே ஆளுநர் உரைக்கு முன்பாக இந்த அறிக்கை அவசரமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
