முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்து 319 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி அதிரடியாக விளையாடி 7.6 ஓவர்களில் 75 ரன்கள் சேர்த்தது.

வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரியான்ஷ் ஆர்யா (58), கேப்டன் திலக் வர்மா (59) மற்றும் குமார் குஷாக்ரா (58) ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தனர். இறுதி ஓவர்களில் விப்ராஜ் நிகம் (30), நிஷாந்த் சிந்து (21 நாட் அவுட்) ஜோடி அதிரடி காட்டியதால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.

 

முன்னதாக, பேட்டிங்கில் 38 ரன்கள் மட்டுமே எடுத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீச்சின் போது மைதானத்தில் அசாத்தியமான கேட்ச் ஒன்றை பிடித்து சக வீரர்களையே திகைக்க வைத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் வீசிய 6-ஆவது ஓவரில், ஆப்கான் வீரர் காலித் தனிவால் அடித்த பந்தை மிட்-விக்கெட் திசையில் பாய்ந்து சென்று தனது இரண்டாவது முயற்சியில் வைபவ் கச்சிதமாகப் பிடித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் சூர்யவன்ஷி ‘இம்பேக்ட் பிளேயராக’ மட்டுமே விளையாடினார் என்பதும், அவர் பீல்டிங்கில் பலவீனமாக இருப்பதாலேயே அணி நிர்வாகம் அவரை பீல்டிங் செய்ய வைக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த இந்த உலகத்தரம் வாய்ந்த கேட்ச், தங்களை விமர்சித்தவர்களுக்கு மைதானத்திலேயே கொடுத்த நெத்தியடி பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.