சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை என்ற பெயரில் எல்லை மீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் மதுர் விர்லி என்பவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘பாலியல் வன்கொடுமை’ போன்ற மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் கொடூரமான குற்றச்சம்பவத்தை அவர் நகைச்சுவை என்ற பெயரில் கிண்டல் செய்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படிப்பட்ட அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதா? இதற்கு எல்லையே இல்லையா? என இணையவாசிகள் கொதித்தெழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளையும், அவர்களது குடும்பத்தினரின் வலியையும் கொச்சைப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் குவிகின்றன.

https://www.instagram.com/reel/DZdUn84zmQ4/?igsh=Mnl6NWlhaTBxN25u

சமீபகாலமாகவே காமெடித் துறை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், மதுர் விர்லியின் இந்த வீடியோ எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூகப் பொறுப்பை உணர்ந்து நகைச்சுவை நடிகர்கள் செயல்பட வேண்டும் எனப் பெரும்பாலானோர் வலியுறுத்தி வரும் நிலையில், சிலர் இதனை கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றனர்.

இருப்பினும், இந்த வீடியோவிற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு உடனடியாக அந்த காமெடியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தில் எதிர்ப்பு எல்லை மீறியதைத் தொடர்ந்து, நெட்டிசன்களின் வசவுகளுக்குப் பயந்து காமெடியன் மதுர் விர்லி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அதிரடியாக முடக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.