அடுத்த தலைமுறைக்கான மனித உருவ ரோபோக்களை உருவாக்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு  நிறுவனங்கள் நிஜ உலகத் தரவுகளை தேடி வரும் நிலையில், சாதாரண மக்களுக்கு இது ஒரு புதிய வருமான வாய்ப்பாக மாறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 25 வயதான இல்லத்தரசி நாகிரெட்டி ஸ்ரீரம்யாசந்திரா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இவர் தனது தலையில் ஸ்மார்ட்போனை பொருத்திக் கொண்டு, காலையில் காபி போடுவது, காய்கறி நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற தனது அன்றாட வீட்டு வேலைகளை முதல் நபர் பார்வையில்  வீடியோவாகப் பதிவு செய்கிறார்.

இந்த வீடியோக்கள் அனைத்தும் ஏஐ நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மனிதர்கள் எப்படிப் பொருட்களைக் கையாளுகிறார்கள், வீட்டு வேலைகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதை ரோபோக்களுக்குக் கற்றுக்கொடுக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோபோக்களின் அசைவுகள் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த டெவலப்பர்கள் முயன்று வருகின்றனர்.

 

இந்த விசித்திரமான பகுதிநேர வேலை மூலம், ஸ்ரீரம்யாசந்திரா தினமும் 90-க்கும் மேற்பட்ட சிறிய வீடியோக்களை எடுத்து, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 250 ரூபாய் வரை சம்பாதிப்பதாக ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியான பதிவு ஒன்று தெரிவிக்கிறது. “வீட்டு வேலை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வேறு யார் தருவார்கள்?” என்று அவர் மகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், இந்தச் செய்தி இணையத்தில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கப் போகும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு, நாமே தரவுகளைக் கொடுத்து உதவுவதா என்று பல நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்களின் சொந்த வேலைகளுக்கே ஆபத்தாக முடிந்த ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க உதவியது போல, தற்போது இல்லத்தரசிகளும் செய்கிறார்கள் என்று ஒரு பயனர் சாடியுள்ளார். மனித உருவ ரோபோக்களின் தேவை மற்றும் அவற்றால் சுற்றுச்சூழல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இணையத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.