குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயிலிருந்து வந்த இண்டிகோ  விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் அதிரடியாகப் புகுந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சாதாரண பயணிகளால் எளிதில் அணுக முடியாத, வழக்கமான சோதனைகளின் போது கண்ணில் படாத விமானத்தின் மிக ரகசியமான பகுதிகளைச் சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக விமான பொறியாளர்களின் உதவியை நாடிய சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களின் ஒத்துழைப்போடு விமானத்தின் உள்பகுதிகளை அக்குவேறாக ஆணிவேறாகப் பிரித்துச் சோதனையிட்டனர். அப்போது, விமானத்தின் முன் பகுதியில் உள்ள கழிவறையில்  இருந்த ஸ்பீக்கர் பாக்ஸைக் கழற்றிப் பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் கறுப்பு நிற பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பைகளைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தலா 24 கேரட் சுத்தமான, வெளிநாட்டு முத்திரையிடப்பட்ட 24 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மொத்த எடை 2 கிலோ 799.3 கிராம் ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 4 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 325 ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தை மீறி, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இந்தத் தங்கத்தைக் கடத்தி வர ஏதோ ஒரு மர்ம நபர் மிகச் சாதுரியமாக இதனை விமானத்திற்குள் ஒளித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தத் தங்கத்திற்கு யாரும் உரிமை கோராததால், அது உரிமை கோரப்படாத சொத்தாகக் கருதப்பட்டு சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சினிமா பாணி கடத்தல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விமான ஊழியர்கள் அல்லது தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களின் உதவி இல்லாமல், பயணிகளால் இப்படி ஸ்பீக்கருக்குள் தங்கத்தை மறைக்கவே முடியாது என்றும், எனவே இண்டிகோ ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.