அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஊழியர்களின் கழிவறை இடைவேளை நேரத்தைக் கண்காணிக்கும் புதிய நடைமுறை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், தனது ரெடிட் பக்கத்தில் இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் நிறுவனத்தின் விதிகளின்படி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே கழிவறை இடைவேளை எடுக்க அனுமதி உண்டு. ஆனால், அவர் ஒரு நாளில் மொத்தம் 53 நிமிடங்கள் இடைவேளை எடுத்ததாகக் கூறி, கூடுதல் நேரத்தைக் கணக்கிட்டு அவரை 40 நிமிடங்கள் கூடுதலாக அலுவலகத்தில் தங்கி வேலை செய்யுமாறு நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

இதனால் தான் எப்போதும் தனது வேலைகளை நேரத்திற்குள் முடித்துவிடுவதாகவும், தன் மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை தன் மீது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த ஊழியர் கவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தான் கழிவறைக்குச் செல்லும்போது மொபைல் போனைக்கூட மேசையிலேயே வைத்துவிட்டுச் செல்வதாகவும், அப்படியிருந்தும் நிர்வாகம் நேரத்தைக் கணக்கிடுவது தன்னை சங்கடப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த நிறுவனத்தின் கடுமையான கொள்கைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ஊழியரின் திறமையையும் உழைப்பையும் அவர் செய்யும் வேலையின் முடிவை வைத்து மதிப்பிட வேண்டுமே தவிர, கழிவறையில் செலவிடும் நேரத்தை வைத்து அளவிடுவது முறையல்ல என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.