பெங்களூரு அரபிக் கல்லூரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சஜியா (28). இவர் தனது நண்பருடன் சொகுசு கார் (மெர்சிடிஸ் பென்ஸ்) ஒன்றில் தேவனஹள்ளிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் பெங்களூரு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். கார் பெங்களூரு புறநகர்ப் பகுதியான தொட்ட ஹுல்லூர் அருகே பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மிக பயங்கரமாக மோதியது. இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால், சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் நடுப்பகுதியில் இரண்டாக உடைந்து முற்றிலும் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த இளம்பெண் சஜியா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்துத் தகவலறிந்த ஹோசகோட்டே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சஜியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் அதிவேகமும், கவனக்குறைவாக இயக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய காரின் பாகங்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்ட நிலையில், போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.