பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கட்வார்சல்பூர் கிராமத்தில், மூன்று குழந்தைகளுக்குத் தாயான 36 வயது திருமணமான பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாக ரகசியக் காதல் இருந்து வந்துள்ளது. வயது வித்தியாசத்தைத் தாண்டி இவர்களது காதல் தீவிரம் அடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த இளைஞர் காதலியைச் சந்திக்க அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
இதை ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கண்காணித்து வந்த கிராம மக்கள், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து பெரிய ரகளை செய்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், இருதரப்பு குடும்பத்தினரும் கிராம மக்களும் அங்கு திரண்டனர். நிலைமை கையை மீறிச் சென்றதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த இளைஞர் “தன் ஆயுள் முழுவதும் அந்தப் பெண்ணோடுதான் வாழ்வேன்” என உறுதியாகக் கூறினார். இதைக் கேட்ட அந்தப் பெண்ணின் கணவர், தன் மனைவியை இனி தன்னோடு சேர்த்து வாழ வைக்க விரும்பவில்லை என அதிரடியாக மறுத்துவிட்டார். மேலும், மனைவியின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போட விரும்பாத அந்த கணவன், தன் மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைக்க சம்மதித்தார்.
இதையடுத்து, கிராமத்தினர் முன்னிலையில் அருகில் இருந்த ஒரு கோயிலில் வைத்து, தன் மனைவிக்கு அவரது காதலனுடன் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த விசித்திரத் திருமணத்தின் போது கணவன், குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் உடனிருந்தனர். இதற்கிடையே, தாயின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த மூன்று குழந்தைகளும், தாயுடன் செல்ல மறுத்துவிட்டு தங்களின் தந்தையுடனேயே வாழப் போவதாகக் கூறி அவருடன் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
