உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிவானி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த மே 18 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டு, முறைப்படி பதிவும் செய்துகொண்டனர்.

இதனிடையே, ஷிவானியை லலித் வர்மா கடத்திச் சென்றுவிட்டதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருவரும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் இருப்பதை அறிந்து மீட்ட போலீசார், கடந்த வெள்ளிக்கிழமை அவர்களைப் பண்டா மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

​விசாரணையின் போது, தாங்கள் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி திருமண ஆவணங்களைப் போலீசாரிடம் காட்டியுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த ஷிவானியின் பெற்றோர், லலித்தை மறந்துவிட்டு தங்களுடன் வீட்டிற்கு வந்துவிடுமாறு ஷிவானிக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், ஷிவானி தனது கணவர் லலித்துடன் மட்டுமே வாழ்வேன் என்று திட்டவட்டமாகக் கூறி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஷிவானியின் தாய் ரன்னோ, மகளைப் பின்னால் இருந்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, அடுத்த நொடியே தந்தை மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, போலீசார் கண்முன்னே ஷிவானியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷிவானி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தந்தை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் பெற்றோர் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்துப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மீதும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.