இன்றைய நவீன காலத்தில் பார்வைக் கோளாறைக் சரி செய்யவும், முக அழகை அதிகரிக்கவும் பலர் கண்ணாடிக்குக் பதிலாக ‘கான்டாக்ட் லென்ஸ்’ பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், முறையான பராமரிப்பும் கவனமும் இல்லையென்றால், இந்த லென்ஸ்கள் கண் பார்வைகே பெரிய ஆபத்தாக முடிந்துவிடும் என்பதற்கு பிரிட்டனில் நடந்த அதிர்ச்சி சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்திய நிலையில், அவரது கண்ணில் திடீரென கடுமையான தொற்று ஏற்பட்டு, விழித்திரையில் பயங்கர துளை உண்டானது கண்டறியப்பட்டுள்ளது. லென்ஸ் அணியும்போது காட்டிய சிறிய அலட்சியமே, அவரது கண்ணை இந்த அளவுக்குக் கடுமையாகப் பாதித்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் தூங்கும்போதோ, குளிக்கும்போதோ அல்லது நீச்சல் அடிக்கும்போதோ அதை அகற்றாமல் இருந்தால், தண்ணீரில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் லென்ஸின் அடியில் தங்கி தீவிர தொற்றை உருவாக்கும். இந்தச் சம்பவத்திலும் அப்படியான பாக்டீரியா தொற்றே பெண்ணின் விழித்திரையைச் சேதப்படுத்தி துளையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் கைகளைத் தூய்மையாகக் கழுவிய பிறகே லென்ஸைத் தொட வேண்டும் என்றும், மருத்துவர்கள் அறிவுறுத்திய நேரத்தைத் தாண்டி தொடர்ந்து அணியக் கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய அலட்சியமும் பார்வையைப் பறிக்கும் அபாயம் கொண்டதால், லென்ஸ் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை என்பதே இந்தச் சம்பவம் தரும் எச்சரிக்கையாகும்.
