சமூக வலைதளங்களில் “வெறும் வயிற்றில் நெய் குடித்தால் உடல் எடை குறையும், நச்சுக்கள் வெளியேறும்” என்று பரவி வரும் வீடியோக்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. ஆனால், சமூக வலைதளங்களில் பார்ப்பதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது ஆபத்தானது என்றும், இது அனைவருக்கும் செட் ஆகாது என்றும் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுர்வேதத்தில் “ஸ்நேஹபானம்” என்ற சிகிச்சை முறையில் நெய் பயன்படுத்தப்பட்டாலும், அது ஒரு மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே செய்யப்படும் சிகிச்சையாகும். மாறாக, சமூக வலைதளங்களில் சொல்வது போல தினமும் 100 முதல் 150 மில்லி நெய்யை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமான மண்டலத்தைப் கடுமையாகப் பாதிக்கும். நெய்யில் நல்ல கொழுப்புகளும் வைட்டமின்களும் இருந்தாலும், அதை “நச்சுக்களை வெளியேற்றும் அதிசய மருந்து” என்று சொல்ல அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை.
குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளே உடலின் கழிவுகளை இயற்கையாக வெளியேற்றுகின்றன. எனவே, அதிக உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால், கொழுப்பு கல்லீரல் (Fatty Liver), பித்தப்பை கற்கள் மற்றும் அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி வெறும் வயிற்றில் நெய் குடிக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக நெய் குடிக்கும்போது குமட்டல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல கொழுப்பைப் பெற நெய் ஒரு சிறந்த உணவு தான்; ஆனால் அதற்கு வெறும் வயிற்றில் அதைக் குடிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் உண்ணும் உணவிலேயே அளவோடு சேர்த்துக்கொள்வதே பாதுகாப்பான வழியாகும். எனவே, சமூக வலைதள ட்ரெண்டுகளைப் பார்த்து மயங்காமல், உங்கள் உடலின் தேவை அறிந்து, மருத்துவரின் ஆலோசனையோடு ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதே சிறந்தது.
