கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்தினாலும் கரண்ட் பில் அதிகமாவது குறித்து பலரும் கவலைப்படுகிறார்கள். ஆனால், ஏசியுடன் மின்விசிறியையும் சரியான முறையில் பயன்படுத்தினால், அறையைக் குறைந்த மின்சாரத்தில் சீரான குளிர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். மின்விசிறி அறையின் வெப்பநிலையைக் குறைக்காது; மாறாக ஏசியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றை அறை முழுவதும் சமமாகப் பரப்ப மட்டுமே உதவுகிறது.

ஏசியை 18°C அல்லது 20°C-ல் வைப்பதற்குப் பதிலாக, ஆற்றல் திறன் பணியகம் (BEE) பரிந்துரைப்பது போல 24°C முதல் 26°C வரை அமைப்பதே சிறந்தது. இந்த வெப்பநிலையுடன் மின்விசிறியைக் குறைந்த வேகத்தில் (Speed 1 அல்லது 2) இயக்கும்போது, குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவி, மின்சாரப் பயன்பாட்டை சுமார் 20 சதவீதம் வரை குறைக்க முடியும்.

ஏசி இயங்கும்போது மின்விசிறியை அதிக வேகத்தில் வைத்தால், அது கீழிருக்கும் வெப்பக் காற்றைக் கலந்து ஏசியின் கம்ப்ரஸரை நீண்ட நேரம் இயங்கச் செய்துவிடும். எனவே மின்விசிறியைக் குறைந்த வேகத்தில் வைத்து, அதிலுள்ள தூசுகளை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படாதவாறு வைப்பது தசைப்பிடிப்பு மற்றும் சரும வறட்சியைத் தவிர்க்கும்.

மேலும், அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை நன்றாக மூடி வைத்து, தடிமனான திரைகளைப் பயன்படுத்துவது வெளிப்புற வெப்பம் உள்ளே வருவதைத் தடுக்கும். இதனால் ஏசியின் குளிர்ச்சி நீண்ட நேரம் நிலைத்திருந்து கம்ப்ரஸருக்கான சுமையைக் குறைக்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே கோடையில் மின் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.