இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருவதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் உலக உடல் பருமன் குறியீட்டுத் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 4 கோடியே 10 லட்சம் குழந்தைகள் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் பிரச்சனையாால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலை நீடித்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்படும் சிறுவர்களில் 11 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிலேயே இருப்பார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சில முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, கடைகளில் விற்கப்படும் உணவுப் பொட்டலங்களின் முன்பக்கத்தில், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்த தெளிவான தகவல்கள் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தாங்கள் வாங்கும் உணவின் தன்மையை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், பள்ளி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 மீட்டர் பரப்பளவில் அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் அதிக உப்பு (சோடியம்) நிறைந்த நொறுக்குத் தீனிகளை விற்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்ற தடையை மிகத் தீவிரமாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் எளிதில் இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு அடிமையாவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதுமட்டுமன்றி, அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. இத்தகைய தீவிர நடவடிக்கைகள் மூலம் மட்டுமே வருங்கால தலைமுறையினரை உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிற நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
