சென்னை அயனாவரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே திடீரென மதுபாட்டில்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது விஜய் தொண்டர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலோ என அனைவரும் பதறிய நிலையில், சென்னை காவல்துறை உடனடியாக உண்மையை உடைத்துள்ளது.
கூட்டத்திற்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த இருவர், குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டபோது, அவர்கள் வீசிய மதுபாட்டில்கள் தவறுதலாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் விழுந்துள்ளன. இது அரசியல் ரீதியான தாக்குதல் அல்ல, குடிகாரர்களுக்குள் நடந்த மோதல் என போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டாலும், போலீஸார் உடனடியாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். “தவறுதலாக நடந்த விபரீதம் இது” என காவல்துறை விளக்கமளித்த பின்னரே தவெக தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இதுபோன்ற சிறு சம்பவங்களும் பெரும் அரசியல் விவாதமாக மாறி வருவதால், பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
