மயிலாடுதுறை அருகே புத்தூர் வாணிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் , விவசாயி. இவருடைய மனைவி வள்ளி . இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வாழ்வாதாரம் தேடி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் – வள்ளி தம்பதியினர் புத்தூரில் உள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். சமீபகாலமாக இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களைக் கவனித்துக் கொள்ள அருகில் யாரும் இல்லாத விரக்தியிலும், நோய் பாதிப்பாலும் மனமுடைந்த தம்பதியினர், சம்பவ நாள் இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தாங்கள் விஷம் குடித்த விபரத்தை சென்னையில் உள்ள தங்களது மகன்களுக்கு அலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகன்கள் உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை புத்தூர் வீட்டிற்கு வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தந்தை காமராஜ் மற்றும் தாய் வள்ளி ஆகிய இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று முன்தினம் காலையில் வள்ளியும், மாலையில் காமராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
