கள்ளக்குறிச்சி மாவட்டம்  புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்வி . சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் அருகே இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டிருந்த ஈரத் துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து இரும்பு கொடி கம்பியில் மின்சாரம் கசிந்து பாய்ந்திருந்தது. இதனை அறியாமல் ஈரத் துணியை எடுக்க முயன்ற செல்வி மீது மின்சாரம் பாய்ந்து, அவர் அலறியுள்ளார்.
செல்வியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, வீட்டில் இருந்த ராஜீயின் தம்பி என்பவர் பதறியடித்துக்கொண்டு அண்ணியைக் காப்பாற்ற ஓடிவந்துள்ளார். மின்சாரத்தின் வீரியம் தெரியாமல், அவரைப் பிடிக்க முயன்றபோது கணேசன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அண்ணி செல்வி, கொழுந்தன் கணேசன் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த சங்கராபுரம் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.