நமது மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடியும் என்று பலரும் சோதனை செய்து பார்ப்பது உண்டு. இது ஒரு சாதாரண சவால் போல தோன்றினாலும், அதிக நேரம் மூச்சை அடக்கிப் பார்ப்பது உடலுக்குப் பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக நாம் மூச்சை அடக்கும் போது, உடலுக்குள் இருக்கும் ஆக்சிஜனைச் செல்கள் வேகமாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றன. அதே நேரத்தில் வெளியேற வேண்டிய கார்பன் டை ஆக்சைடு ரத்தத்தில் படிப்படியாக அதிகரிக்கும். இதனால் உடனே மூச்சு விட வேண்டும் என்ற அழுத்தமும், நெஞ்சில் ஒருவித அசௌகரியமும் ஏற்படும்.

தொடர்ச்சியாக நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு கணிசமாகக் குறைகிறது. இதனால் தலைசுற்றல், பலவீனம் மற்றும் குழப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்தால் மயக்கம் மற்றும் சுயநினைவின்மை வரை செல்ல வாய்ப்புள்ளது.

எவ்வளவு நேரம் மூச்சை அடக்க முடிகிறது என்பதைக் கொண்டு மட்டும் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் கணக்கிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரது உடற்பயிற்சி பழக்கம், மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சி மற்றும் கார்பன் டை ஆக்சைடைத் தாங்கும் திறன் ஆகியவையே இதைத் தீர்மானிக்கின்றன.

எனவே, குறிப்பாக இதய மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி மூச்சை அடக்கும் பயிற்சிகளைச் செய்யக்கூடாது. நுரையீரல் ஆரோக்கியத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதே பாதுகாப்பான வழியாகும்.