சென்னையின் அமைதியான மாலைப் பொழுதை அதிரவைத்துள்ளது ஒரு சோகச் செய்தி. பள்ளி வளாகத்தில் சக மாணவர்களின் தவறான செயலைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு பிளஸ்-2 மாணவன் முப்பதுக்கும் மேற்பட்டோர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலுக்கிப் போட்டிருக்கிறது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 16 வயது மாணவன் தனுஷ். அங்குள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். வழக்கம்போல பள்ளிக்குச் சென்று திரும்ப வேண்டிய அந்த மாணவன் , தன் வாழ்நாளின் கடைசி நாட்டைச் சந்திப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
அதாவது இது பற்றி மாணவனின் தந்தி கூறுகையில், “பள்ளி வளாகத்தில் என் மகனும் அவனது நண்பன் ஜெயகேஷும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது பிளஸ்-1 மாணவர்கள் சிலர் அங்குக் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, போதையில் தனுஷின் முகத்திலேயே புகையை ஊதியுள்ளனர். இதைக் கண்டு கொதித்தெழுந்த ஜெயகேஷ், ‘இதை எப்படிச் செய்யலாம்?’ என்று அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். அந்த ஆத்திரம் தான் இந்த விபரீதத்திற்குக் காரணம்.” ஜெயகேஷ் தட்டிக் கேட்ட கோபத்தில், தனுஷையும் அவனது நண்பனையும் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று அந்தப் பிளஸ்-1 மாணவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
சம்பவத்தன்று ஜெயகேஷ் பள்ளிக்கு வரவில்லை. இதனால் தனித்து விடப்பட்ட தனுஷ், பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்தான். இதைக் குறிவைத்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய கும்பல், தனுஷை வழிமறித்து வலுக்கட்டாயமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்திற்கு இழுத்துச் சென்றது. அங்கே வைத்து கொடூரமாகத் தாக்கியதில், உடல் முழுவதும் உள்காயங்கள் அடைந்த தனுஷ் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
தன் மகனை இழந்துவிட்டத் தவிப்பில் இருக்கும் பெற்றோரும், உறவினர்களும் திருவொற்றியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். “எங்கள் மகனை கொன்ற அந்த முப்பது மாணவர்களையும் உடனடியாகக் கைது செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை விடமாட்டோம்” என்று அவர்கள் ஆவேசமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 3 மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களைக் கூண்டோடு பிடிக்க, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பள்ளியின் புனிதமான சுவர்களுக்குள் ஊடுருவியுள்ள போதை கலாச்சாரம் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
