ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகவ் சத்தா, தன் மீது திட்டமிட்ட முறையில் அவதூறு பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாகக் கூறி அதற்கு விரிவான விளக்கமளித்துள்ளார். தனக்கு எதிராக ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்படுவதாகவும், ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதால் இதற்குப் பதிலளிக்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்போது தான் பங்கேற்கவில்லை என்பதும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தேன் என்பதும் அப்பட்டமான பொய்கள் என்று அவர் சாடியுள்ளார். அக்கட்சியின் மற்ற எம்.பி.க்கள் பலரும் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடாத நிலையில், தன் மீது மட்டும் ஏன் பழி சுமத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள ராகவ் சத்தா, ஆம் ஆத்மி தலைமையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்திற்குச் சென்றது கூச்சல் போடவோ அல்லது அவை விதிகளை மீறவோ அல்ல, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எழுப்புவதற்காகவே என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதானபோதும், அவர் விடுதலையான கொண்டாட்டங்களின் போதும் ராகவ் சத்தா ஒதுங்கியிருந்ததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
