இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பெண்கள் இருசக்கர வாகனங்களின் பின்னால் அமரும்போது, இரண்டு கால்களையும் ஒருபுறமாக வைத்து  அமர்வதைக் காண்கிறோம். இது காலம் காலமாகத் தொடரும் நமது கலாச்சாரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இது ஐரோப்பியர்களால் திணிக்கப்பட்ட ஒரு பழக்கம் என்ற உண்மை தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பைக் ரைடர் ஜெனித் இர்பான் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த முறையின் வரலாற்றை விளக்கியுள்ளார். இடைக்காலத்தில் ஐரோப்பிய ராஜவம்சப் பெண்கள் குதிரை மீது ஏறி அமரும்போது, இரண்டு கால்களையும் இருபுறமும் போட்டு அமர்வது நாகரிகமற்றது எனக் கருதப்பட்டது. 1382-ல் போஹிமியா இளவரசி ஆன், ரிச்சர்ட் மன்னரைத் திருமணம் செய்யச் சென்றபோது இம்முறையைப் பின்பற்றினார். இதுவே பிற்காலத்தில் ‘பெண்களுக்கான கண்ணியம்’ என அடையாளப்படுத்தப்பட்டது.

இந்திய வரலாற்றில் பெண்கள் போர் புரியும்போது ஆண்களுக்கு நிகராகக் குதிரையின் இருபுறமும் கால் பதித்தே பயணித்தனர். ஜான்சி ராணி லட்சுமி பாய் இதற்குச் சிறந்த உதாரணம். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் தங்களது ஐரோப்பியப் பழக்கவழக்கங்களை இங்கே புகுத்தினர். ஸ்கூட்டர் மற்றும் பைக் அறிமுகமானபோது, அந்தப் பழக்கம் இதிலும் ஒட்டிக்கொண்டது.

இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடைகளான புடவை மற்றும் பாவாடை அணிந்து கொண்டு வாகனத்தின் இருபுறமும் கால் போட்டு அமர்வது சவாலான காரியம் என்பதால், வசதி கருதி பெண்கள் இம்முறையைத் தழுவிக் கொண்டனர்.  இருப்பினும், பாதுகாப்பு ரீதியாக இம்முறை மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாகனத்தின் ஒரு பக்கமே எடை கூடுவதால் ஓட்டுநருக்குச் சமநிலையைப் பேணுவது கடினமாகிறது.அவசர காலத்தில் திடீரென பிரேக் போடும்போது, ஒருபுறமாக அமர்ந்திருப்பவர்கள் எளிதில் கீழே விழ வாய்ப்புள்ளது. அதிவேகமாகச் செல்லும் வாகனங்களில் இம்முறையில் அமர்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும். கண்ணியம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட இந்த முறை, இன்று பெண்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Zenith (@zenithirfan)