வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் தேவையைக் குறைத்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுசேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, மராட்டிய மற்றும் டெல்லி அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று சட்டப்பேரவைக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
எரிபொருள் சிக்கனம் குறித்த பிரதமரின் வேண்டுகோள் அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதற்காக எனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளேன். மேலும், அரசு செலவினங்களைக் குறைக்க அடுத்த 6 மாதங்களுக்கு எவ்விதப் பெரிய அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.
#WATCH | பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்த நிலையில், ராயல் என்ஃபீல்டு பைக்கில் வந்த மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்#SunNews | #PetrolConsumption | #Maharashtra pic.twitter.com/tBr3xTRpTX
— Sun News (@sunnewstamil) May 14, 2026
இதேபோல், டெல்லி அரசும் கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர்கள், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறையினரும் அலுவல் ரீதியான பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
