மகாராஷ்டிராவில் திருமண விசேஷத்தில் டிஜே இசைக்கு நடனமாடிய காரணத்திற்காக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
வினோத் ரத்தோட் மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது, பாயல் அங்கிருந்த இசைக்கு நடனமாடியுள்ளார். இது வினோத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக் கொண்டு பாயல் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரம் தணியாத வினோத், அதிகாலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாயலின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரும் அருகில் உள்ள வயல் வெளியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயரமான முடிவால் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் எட்டு மாதக் கைக்குழந்தை என மூன்று பிள்ளைகள் அனாதையாகி நிற்கின்றனர்.
ஒரு சிறிய விவாதத்தில் தொடங்கிய கோபம், ஒரு குடும்பத்தையே அழித்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
