எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 27% அளவுக்குக் அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனால் மாதத்திற்குச் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சிகாகோ, நியூயார்க், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய நகரங்களுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன அல்லது குறைந்துள்ளன. செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்ததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சுமார் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா விமானிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பணிநீக்கம் குறித்த அச்சம் எழுந்துள்ளது. சம்பளக் குறைப்பு அல்லது ஊதியமில்லா விடுமுறை அளிக்கப்படுமோ என்று ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.

இருப்பினும், ஊழியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன், பணிநீக்கங்கள் எதுவும் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். தற்போதைய சூழல் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை சீராகாவிட்டால் இந்த சேவைக் குறைப்பு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.