உள்நாட்டில் சர்க்கரை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30, 2026 வரை முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, தற்போது சர்க்கரை ஏற்றுமதியை ‘கட்டுப்படுத்தப்பட்ட’ (Restricted) பிரிவில் இருந்து ‘தடை செய்யப்பட்ட’ (Prohibited) பிரிவுக்கு மாற்றியுள்ளது.

​வெள்ளை சர்க்கரை, கச்சா சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என அனைத்து வகைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிவித்துள்ளது. எல் நினோ பாதிப்பால் கரும்பு விளைச்சல் குறையக்கூடும் என்ற அச்சம் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் சர்க்கரை விலை உயராமல் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கான சில குறிப்பிட்ட கோட்டா அடிப்படையிலான ஏற்றுமதிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.