திமுக அரசு புதிதாகத் தொடங்கியுள்ள ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தைக் கடுமையாகச் சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்கப் போவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் கபட நாடகம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
தன்னார்வலர்கள் என்ற பெயரில் 50,000 பேரை வீடு வீடாக அனுப்பி, திமுக-வுக்கு வாக்கு சேகரிப்பதே இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுப் பணத்தைச் செலவு செய்து, ‘PEN’ என்ற தனியார் நிறுவனம் மூலம் திமுக-வின் தேர்தல் வேலையை அரசுத் திட்டமாக மாற்றுவது மிகப்பெரிய மோசடி என்றும், இதற்குப் பதில் அரசு நிர்வாகத்தையே அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம் என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்களைத் திரட்டுவது தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் சுய விளம்பரம் தேடும் திமுக அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதுபோன்ற ‘காதில் பூ சுற்றும்’ வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தனது எக்ஸ் பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
