கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்றும், அங்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது திமுக அரசின் கடமை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்க்கு சம்மன் அனுப்பி ஒரு தவறான முன்னுதாரணத்தை அரசு உருவாக்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ள இவரது இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை வலுப்படுத்துவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள வேளையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது அதிமுக – தவெக இடையே ஒரு மறைமுகமான இணக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்து விஜய்க்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.