உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பரபரப்பான விஐபி சாலையில், நபர் ஒருவர் பெண் ஒருவரை காரை நோக்கி பலவந்தமாகத் தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்துள்ள விஐபி சாலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வீடியோவில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நடுரோட்டில் வைத்து அந்த பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது அந்த பெண் வர மறுத்துக் கதறிய நிலையிலும், அந்த நபர் கொஞ்சமும் இரக்கமின்றி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாகத் தனது காரை நோக்கி இழுத்துச் செல்கிறார்.
आगरा के वीवीआईपी रोड पर कार सवार महिला-पुरुष का हाईवोल्टेज ड्रामा…खुद को दारोगा बताने वाले शख्स ने महिला को जबरन खींचा…थाना ताजगंज फतेहाबाद रोड का बताया जा रहा वीडियो@agrapolice @Uppolice #breakingnews #news pic.twitter.com/Y8BDE21A2Y
— Journalist Deepika singh (@Deepikasingh043) June 7, 2026
நட்டநடு ரோட்டில் இந்த நாடகம் நீண்ட நேரம் நீடித்ததால், அந்த வழியாகச் சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து அங்கு பெருமளவில் கூடத் தொடங்கினர். இந்த மோதலின் போது, பெண்ணை இழுத்துச் சென்ற நபர் தன்னை ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று அங்கிருந்தவர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் உண்மையான போலீஸ் அதிகாரி தானா அல்லது அவரது பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறை தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு நேர்ந்த அநீதி குறித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஆக்ரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
