மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், பெற்ற தாய் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில், 4 வயது மதிக்கத்தக்கத் தனது சொந்தப் பேத்திகே பாலியல் வன்கொடுமை இழைத்த தாத்தாவின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மொரேனா மாவட்டத்தின் ஜௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணு கா புரா கிராமத்தில் இத்தகைய நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 4 வயது சிறுமியின் தாய், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், வீட்டில் தாய் இல்லாத சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த காமவெறி பிடித்த தாத்தா, தனது சொந்தப் பேத்தி என்றும் பாராமல் அவளுக்குப் பாலியல் ரீதியாகக் கடுமையான கொடுமைகளை இழைத்துள்ளார்.

இந்த பயங்கரமான உண்மை, அந்தத் தாய் தனது கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது 4 வயது மகள் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கு மற்றும் தாங்க முடியாத வலியால் துடிப்பதைக் கண்டு பதறிய தாய், உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவள் பாலியல் ரீதியாகக் கொடூரமாகச் சீரழிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பின்னர், அந்தத் தாய் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் மகளிடம் மெதுவாக விசாரித்த போது, தாய் இல்லாத நேரத்தில் தனது சொந்தத் தாத்தாதான் தனக்கு இந்தத் துரோகத்தைச் செய்தார் என்று மழலை மாறாத குரலில் அழுதுகொண்டே சிறுமி உண்மையை உடைத்துள்ளாள்.

சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவள் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்; இச்சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக உள்ளூர் ஜௌரா போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்று, இந்த விவகாரத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்தக் கொடூர முதியவரைப் பிடிக்கத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.