மத்திய பிரதேச மாநிலம் சத்தார்ப்பூர் மாவட்டத்தில், நகைக் கடை ஒன்றுக்குள் வாடிக்கையாளர்கள் போல நைசாக நுழைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு இளம் சிறுமி, கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பி சுமார் 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்ற அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தார்ப்பூர் மாவட்டத்தின் சாடியா நகரில் உள்ள பாரத் மாதா சவுக் அருகே கௌரவ் சோனி என்பவருக்குச் சொந்தமான நகைக் கடையில்தான் கடந்த ஜூன் 5-ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் இந்த நூதன திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நகைக் கடைக்குள் கஸ்டமர்கள் போல வந்த அந்த மூன்று பேர், தங்களுக்குப் பல டிசைன்களில் வெள்ளி கொலுசுகளைக் காட்டுமாறு கடைக்காரரிடம் கேட்டுள்ளனர்.

கடைக்காரர் கொலுசுகளை எடுத்துக் காட்டிய போது, அவருடன் தொடர்ந்து பேசி அவரது கவனத்தை அபுரூபமாகத் திசைதிருப்பியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு பெண் ஒரு ஜோடி வெள்ளி கொலுசைத் தனது ஆடைகளுக்குள் மறைக்க, மற்றொரு பெண் அடுத்த ஜோடி கொலுசைத் தனது பர்சுக்குள் மிக லாவகமாகத் திணித்துள்ளார். அவர்களுக்குத் துணையாக வந்த அந்த இளம் சிறுமியும் தொடர்ந்து கடைக்காரரிடம் பேசி அவரைத் திசைதிருப்பிக் கொண்டே இருந்துள்ளார்.

பின்னர் எதையும் வாங்காமல் அங்கிருந்து அந்த மூவர் கும்பலும் நைசாக நழுவிச் சென்றுவிட்டது. கடைக்காரர் தனது இருப்புப் பொருட்களைச் சரிபார்த்த போதுதான் இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள் காணாமல் போன அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. உடனே அவர் கடையில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்தப் பெண்கள் நகைகளைத் திருடி மறைத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது அம்பலமானது.

பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் கௌரவ் சோனி இதுகுறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குப் புகார் அளித்துள்ளார். தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற அந்தப் பலே பெண்களை அடையாளம் கண்டு பிடிப்பதற்காகத் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.