“தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு இடையே, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது நடைமுறையில் இல்லை’ என்றும், ‘யார் யாருடைய கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றோம் என்பது தற்பொழுது முக்கியமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நல்லரசு அமைவதே முக்கியம்’ என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவளிப்பது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றும், இதான் தங்களது திட்டவட்டமான நிலைப்பாடு என்பதால் இதுகுறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும் என்றும் விவாதத்தை அறிவாலயம் பக்கம் திருப்பிவிட்டார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அந்தந்த காலகட்டத்தில்தான் முடிவு செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தொடர்வதாகவும், ஆனால் அதே இந்தியா கூட்டணியில் தி.மு.க-வின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து மிக விரைவில் தெரியவரும் என்றும்  பேசினார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தி.மு.க. கூட்டணியின் பிரதான அங்கமான சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் நடத்தியுள்ள இந்த  பேட்டி, கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்களில் பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது.