அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலான ‘செரீனா’வில் நடைபெற்றது.

ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்புக்குச் சொந்தமான இந்த ஹோட்டல், 15 ஏக்கர் பரப்பளவில் 400-க்கும் மேற்பட்ட அறைகளுடன் சர்வதேச தரத்திலான பாதுகாப்பைக் கொண்டது என்பதால் இந்தச் சந்திப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், அமெரிக்கா தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் முற்றுகையை அறிவித்து ஆக்ரோஷமான நிலையை எடுத்துள்ளது.

தற்போது இந்தப் பேச்சுவார்த்தையின் தோல்வியைக் காட்டிலும், அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணப் பட்டியல் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுவினர் ஐந்து நாட்கள் தங்கியதற்கான பெரும் தொகையை பாகிஸ்தான் அரசு செலுத்தவில்லை என்றும், அந்தத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால், ஹோட்டல் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்கள் இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர். ஒருபுறம் அமைதி முயற்சி தோல்வியடைந்த நிலையில், மறுபுறம் இந்த ‘ஹோட்டல் பில்’ விவகாரம் பாகிஸ்தானுக்குப் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.