கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில், விவசாயம் செய்ய மாடுகளோ அல்லது இயந்திரங்களோ வாடகைக்கு எடுக்க வசதியின்றி, ஒரு விவசாயி தனது மனைவியையே ஏர்க்கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வறுமையின் விளிம்பில் நின்று அந்தத் தம்பதி செய்த இந்த விவசாயக் காட்சி, தற்போதைய சமூக அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஹல்லி கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பண்ணா. விவசாயியான இவருக்குச் சொந்தமாகச் சிறிய அளவில் விவசாய நிலம் உள்ளது. இவருக்கு சங்கமா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை மிகவும் கஷ்டப்பட்டு நடத்தி வந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Daily Salar Urdu Digital (@salarurdudigital)

தற்போது விவசாயப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், தங்களது நிலத்தை உழவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு திப்பண்ணா தள்ளப்பட்டார். ஆனால், இன்றைய நவீனக் காலத்தில் நிலத்தை உழுவதற்குத் தேவையான டிராக்டர் அல்லது கலப்பை இயந்திரம் போன்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்குக்கூட அவரிடம் பணம் இல்லை. மாடுகளை வாடகைக்கு அமர்த்தவும் வழியில்லாததால், வேறு வழியின்றி தனது மனைவியின் உதவியை அவர் நாடியுள்ளார். கணவனின் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மனைவி சங்கமா, மாடுகளுக்குப் பதிலாகத் தானே ஏர்க்கலப்பையைச் சுமக்க முன்வந்துள்ளார்.

இதையடுத்து, மனைவியை ஏர்க்கலப்பையில் பூட்டி அந்த விவசாயி தனது நிலத்தை உழுதுள்ளார். பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இந்த அவலக் காட்சி, சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி தற்போது நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அந்தத் தம்பதியினர், “இதுவரை அரசாங்கம் எங்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை; இனியாவது எங்களது வறுமை நிலையைக் கண்டு அரசு உரிய உதவி வழங்க வேண்டும்” என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.